அணு அண்டம் அறிவியல் -66 உங்களை வரவேற்கிறது.
சில அத்தியாயங்களுக்கு வேறு ஒரு டாபிக் பார்த்து விட்டு நட்சத்திரங்கள் பற்றிய Discussion ஐத் தொடருவோம்.
சில அத்தியாயங்களுக்கு வேறு ஒரு டாபிக் பார்த்து விட்டு நட்சத்திரங்கள் பற்றிய Discussion ஐத் தொடருவோம்.
ஒன்று நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோம், இல்லை தனியாக இல்லை.- இரண்டு எண்ணங்களும் பயத்தை அளிக்கின்றன - ஆர்தூர் க்ளேக்.
![]() |
| செவ்வாயின் நிலப்பரப்பு |
EXTRA TERRESTRIAL LIFE அதாவது பூமியை விட்டு வேறு எங்காவது உயிர்கள் வாழ்கின்றனவா என்னும் தேடல். Are we alone in the universe ? என்னும் கேள்வி விஞ்ஞானிகளை வெகுகாலமாகக் குடைந்து வந்துள்ளது.ஒரு வீட்டுக்குப் புதியதாகக் குடிபோனால் பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் (ஏதாவது ஃபிகர் கிகர் இருக்கிறதா)என்று எட்டிப் பார்க்கும் ஆர்வம் மனிதனுக்கு இயல்பாகவே உண்டு. ஆனால் பூமியின் 'பக்கத்து' வீடுகள் கற்பனை செய்யமுடியாத தூரங்களில் இருப்பதால் இந்த பக்கத்து வீட்டு ஆர்வம் இன்னும் ஓர் எல்லையிலேயே இருந்து வருகிறது. நமக்கெல்லாம் தெரிந்த மிகவும் பரிச்சயமான பக்கத்து வீடுகள் நிலா, வெள்ளி, புதன், செவ்வாய் போன்ற நம் அக்கா தங்கை வீடுகள். இவற்றில் உயிர்கள் இல்லாவிட்டாலும் ஏதாவது ஆபத்து என்றால் இங்கே நாம் குடியேற முடியாதா என்று ஆசைப்படுகிறார்கள்.இதில் முதல் மூன்றும் மிகவும் முசுடு. உள்ளே யாரும் காலடி எடுத்து வைக்க முடியாத படி கலீஜாக இருக்கின்றன.விருந்தினர்களை வாசலிலேயே விரட்டி அடித்து விடும் வன்னெஞ்சம் அவர்களுக்கு! BEST CHOICE செவ்வாய் என்கிறார்கள்.செவ்வாய் தன்னிடம் வருபவர்களை திரும்பி 'செல்வாய்' என்று சொல்லாமல் அதற்கு ஓரளவு விருந்தோம்பல் குணம் வாய்த்திருக்கிறது. எதிர்காலத்தில் INTER PLANETARY STATION கள் வரலாம். செவ்வாய்க்கு ஹனிமூன் பேக்கேஜுகள் வரலாம். செவ்வாய் விசா வாங்க வேண்டி இருக்கும்.இப்போதே பக்கத்தில் உள்ள கிரகங்களில் ப்ளாட்டுகள் விஜய் டிவியில் சீரியல் நடிகர்களை வைத்து விளம்பரம் போடாத குறையாக விற்பனை ஆகி வருகின்றனவாம்.காசு நிறைய இருந்தால் ஒன்றிரண்டு சைட்டுகளை இப்போதே வளைத்துப் போடவும்.பிற்காலத்தில் உங்கள் தலைமுறைகள் ச்சே கொள்ளுத்தாத்தா மார்ஸ்ல அப்பவே ஒரு சைட்டு வாங்கிப் போட்டிருக்கலாம் என்று நொந்து கொள்ளும் நிலைமையை உருவாக்க வேண்டாம்.சரி. ஜோக்ஸ் அபார்ட்.
![]() |
| ப்ருனோ . |
'பூமிக்கப்பால் வாழ்க்கை' என்ற விவகாரத்தை 1600 களில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் தத்துவ ஞானி ஜியோர்டனோ ப்ருனோ . எல்லா ஆதிக்கமும் சர்ச்சின் கைகளில் இருந்த காலம் அது. அப்போது அவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் (ரோம் நகரில்) 'சூரியன் என்பது ஒரு நட்சத்திரம்;பூமி சூரியனை சுற்றி வருகிறது. பிரபஞ்சத்தில் இது போல தாய் நட்சத்திரத்தை சுற்றும் ஆயிரக்கணக்கான கிரகங்கள் இருக்கலாம்; அதில் வெவ்வேறு உயிரினங்கள் இருக்கலாம்' என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்.இது பாதிரியார்களை மிகவும் உறுத்தியது. WE ARE EXCLUSIVE என்ற கர்வம் மனிதனுக்கு எப்போதுமே இருந்துள்ளது.பத்தோடு பதினொன்றாக இருக்க மனித மனம் விரும்புவதில்லை. இன்னொரு கிரகம் என்றால் அங்கு வாழ்க்கை சாத்தியம் என்றால் அங்கே உள்ள சர்சுகளில் இருந்து எங்கே பாதிரிமார்கள்,பிஷப்புகள், போப்புகள் தங்களுக்குப் போட்டியாக (?) வந்து விடுவார்களோ என்ற பயத்தில் ப்ருனோ கைது செய்யப்பட்டார். நடுரோட்டில் அவர் நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு கடைசியில் உயிரோடு எரிக்கப்பட்டார். சூரியன் தான் பூமியை சுற்றுகிறது. பிரபஞ்சம் எங்கும் பூமியில் தான் உயிர்கள் இருக்கின்றன. பூமி போன்ற கிரகங்கள் இல்லை;பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே போப்பு தான். யாராவது மறுத்தால் அவர்களுக்கும் இதே கதி தான் என்று தண்டோரா போடப்பட்டது.
![]() |
பூமி- பிரபஞ்சத்தின் மையம் |
ஆனால் சமீபத்தில் ப்ருனோவின் ஆவி தன் பழி வாங்குதலைத் தொடங்கி உள்ளது.ஒரு மாதத்துக்கு குறைந்த பட்சம் இரண்டு பூமியொத்த கிரகங்கள் இப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. Bruno was right; There can be number of Popes in the universe! ஆனால் கிரகங்கள் இருப்பதால் மட்டும் அதில் உயிரினங்கள் இருக்கின்றன என்று சொல்லி விட முடியாது.கிரகங்களை (சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியுடன்) கண்டுபிடிப்பது சுலபம். தாய் விண்மீனின் வெளிச்சத்தில் ஒரு கரும்புள்ளி நகருவதை பார்த்தால் அது ஒரு கிரகம் என்று ஊகிக்கலாம். அந்த கிரகங்களில் டைனோசர்கள் இருந்தாலும் கூட அது தொலைநோக்கியில் தெரியாது. ஏனெனில் உயிர் என்பது ஒரு சிக்கலான விஷயம். வெப்பம், தண்ணீர், ஆக்சிஜன், கார்பன் இவை இருந்தாலும் கூட உயிர் வந்து விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சர்க்கரை, பால், காபித்தூள் இவைகளைக் கலந்தால் இன்ஸ்டன்ட் ஆக காபி வருவதைப் போல அல்ல உயிர்.
FIRST,பூமிக்கப்பால் உள்ள உயிரினங்களைத் தேடும் போது நாம் அதீத கற்பனைகளை விட்டு விட வேண்டும். உயிர் என்றால் அது 'கிட்டத்தட்ட' பூமியில் இருப்பது போலவே இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இன்றி உயிர்கள் இருக்கும்; இரும்பால் ஆன உயிர்கள் (மெஷின்கள்) நடந்து வரும் , ஹைட்ரஜன் பூதங்கள் இருக்கும் என்ற கற்பனைகளை விட்டுவிட வேண்டும். இரும்பால் ஆன உயிர்கள் இருந்தால் அவை இறந்ததும் செல்லரித்துப் போவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும்.இது உயிர் சுழற்சியை ஏற்படுத்தாது.
'தண்ணீர்' ஒரு பிரபஞ்ச கரைப்பான் (UNIVERSAL SOLVENT ) என்று நமக்குத் தெரியும்.உடம்புக்குத் தேவையான சத்துக்களை மிக எளிதாக தண்ணீரில் கரைத்து செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.தண்ணீரை செல்லமாக கடவுளின் MIXING BOWL என்று அழைக்கிறார்கள். மேலும் தண்ணீர் மூலக்கூறுகள் ஒன்று ஒன்று ஒட்டிக் கொள்ளும் தன்மை உடையவை. தண்ணீரின் இந்த பசைத் தன்மை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.[தண்ணீரில் கப்பல் மிதப்பதற்கும் கற்களின் மேல் கப்பல் ஊர்ந்து செல்வதற்கும் ஒப்பிட்டுப் பாருங்கள்]எனவே எத்தனை உயரமாக இருந்தாலும் மரங்கள் தண்ணீரை கீழிருந்து உறிஞ்ச முடிகிறது; மேலும் தண்ணீர் ஒரு heat sink போல செயல்பட்டு ஒரு கிரகத்தின் வெப்பநிலையை MAINTAIN செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது.நீரின்றி அமையாது உலகு! எனவே உயிர்கள் இருக்கிறதா என்று தேடும் விஞ்ஞானிகள் முதலில் அங்கு தண்ணீர் இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.[ அதானே , 'தண்ணி' இல்லாம எப்பூடி 'குடி' ஏறறது?]
அடுத்து கார்பன்!
கார்பனின் வெளிக்கூட்டில் அமைந்திருக்கும் நான்கு எலக்ட்ரான்கள் அதை ஸ்பெஷல் ஆக்குகின்றன. தன் கூட்டை நிறைவு செய்யும் வெறியில் அவை தாய்லாந்தில் வீதிகளில் நின்று கஸ்டமர்களை அழைக்கும் விலைமாதர்களை (நெருடலான உதாரணத்திற்கு மன்னிக்கவும்) போல மற்ற தனிமங்களை விரகதாபத்தில் தன்னிடம் ஈர்க்கின்றன. ஆக்சிஜன், ஹைட்ரஜன் , நைட்ரஜன் போன்ற சபல தனிமங்கள் கார்பனுடன் 'உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்று எளிதாக இணைந்து விடுகின்றன. ப்ரோடீன், கார்போ ஹைட்ரேட், அமினோ அமிலங்கள் போன்ற உயிருக்குத் தேவையான விஷயங்கள் கார்பன் பிணைப்புகள் மூலம் எளிதில் கிடைக்கின்றன.கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிக நீளமான கார்பன் சங்கிலிகள் (அறுந்து விடாமல்) கிடைக்கின்றன. டி.என்.ஏ போன்ற உயிர் விதைகளுக்கு இந்த நீண்ட சங்கிலிகள் மிக அவசியம்.சுருக்கமாக சொன்னால் NO CARBON NO CHEMISTRY ! (நோ கெமிஸ்ட்ரி நோ மானாட மயிலாட :) )மிகவும் ரொமாண்டிக் ஆனது இந்தக் கார்பன். எல்லாருடனும் 'அட்ஜஸ்ட்' செய்து போகக் கூடியது.இன்னும் விளங்கும் படி சொன்னால் பிரபஞ்சத்தின் முதல் விலைமகள் கார்பன் தான்.
கார்பனுக்குப் போட்டியாக பிசினஸ் செய்யும் வல்லமை (சக்களத்தி?) சிலிகானுக்கு உண்டு.சிலிகான் கார்பனுடன் ஒத்த வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது.நான்கு பிணைப்புகள் மற்றும் தனிம அட்டவணையில் கார்பனுக்குக் கீழேயே இருக்கிறது. எனவே SILICON BASED LIFE என்பதை நீங்கள் அறிவியல் புனைவுக் கதைகளில் (A Martian Odyssey ) படித்திருக்கக் கூடும்.ஆனால் சிலிகான் பிரபஞ்சத்தில் குறைவாகவே கிடைக்கிறது. கார்பனைப் போல அவ்வளவாக வளைந்து கொடுக்கும் தன்மை இல்லை. கார்பனைப் போல மிக நீண்ட சங்கிலிகளை அமைக்காமல் ஆறு மூலக்கூறுகளுக்கு மேலே போனால் முணுக்கென்று கோபித்துக் கொண்டு உடைந்து விடுகிறது.
![]() |
கார்பன் அதன் எலக்ட்ரான்களுடன் -பார்பதற்கு எம்பெருமான் சுதர்சன சக்கரம் போல இருக்கிறது என்று வியக்கலாம். |
சுவாசிக்கும் போது கார்பன் ஆக்சிஜனுடன் இணைந்து கார்பன்டை ஆக்சைடாக (வாயுவாக) எளிதில் மூக்குவழியே வெளியேறி விடுகிறது. ஆனால் சிலிகான் ஆக்சிஜனுடன் இணையும் போது சிலிகான் டை ஆக்சைடு (சிலிகா) (மணல்)என்னும் திடப்பொருள் கிடைக்கிறது. எனவே நாம் SILICON based life ஆக இருந்தால் மூக்கு வழியாகவும் No.2 போக வேண்டும். ஐந்து வினாடிகளுக்கு ஒரு முறை பாத் ரூம் போகும் அவலம்! GOD IS GREAT! மூக்கு வழியே நொடிக்கு நொடி நாம் வெளியிடும் கழிவு யாருக்கும் தெரிவதில்லை; துர் நாற்றமும் வீசுவதில்லை. 'உன் மூச்சுக் காற்றில் (நம்பர் டூ) நான் வாழ்வேன்' என்று சினிமாப் பாட்டெல்லாம் வேறு எழுதுகிறோம்.
மில்லர்-யூரே ஆய்வு (1953 ) புகழ் பெற்ற ஓர் உயிரியல் (அல்லது வேதிஇயல்)ஆய்வாகும். தண்ணீர், மீத்தேன், அம்மோனியா, ஹைட்ரஜன் போன்ற விஷயங்களை ஒரு பிளாஸ்கில் எடுத்துக் கொண்டு [இந்த விஷயங்கள் தான் பூமியில் உயிர்கள் தோன்றிய போது இருந்தன] அதற்கு மிக மைல்டாக எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தார்கள். ஒரு வாரம் கழித்துப் பார்த்த போது பிளாஸ்கில் அமிமோ அமிலங்கள் உருவாகி இருந்தன.[அமினோ அமிலங்கள் ப்ரோடீனை உருவாக்குகின்றன] பிளாஸ்கில் கொடுக்கப்பட்ட மின்சாரம் அமோனியா மற்றும் மீத்தேனின் கார்பன் பிணைப்புகளை சைலண்டாக உடைத்து அவற்றை REARRANGE செய்து அமினோ அமில சங்கிலிகளை உருவாக்கியது.அதாவது கார்பன் ஒரு வாரத்தில் தன் பாய் ஃபிரண்டை மாற்றிக் கொண்டு விட்டிருந்தது. [நலத்தின் கண் நாரின்மை தோன்றின்.. ஆம் கார்பனின் குலம் சரியில்லை..அவள் என்ன பண்ண முடியும்?]
அடுத்து தன்னைத் தானே படியெடுத்துக் கொள்ளும் தன்மை உடைய டி.என்.ஏ மூலக்கூறுகள்! (இவையும் கார்பன் சங்கிலிகள் தான்) உலகில் முதன் முதல் டி.என்.ஏ ஏணி உருவாவதற்கு பூமித்தாய் பல மில்லியன் ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆழ்கடலில் மில்லர்-யூரே ஆய்வை செய்து விட்டு மில்லியன் ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தால் ஒரு DNA மூலக்கூறை நாம் தரிசிக்க முடியும் என்கிறார்கள்.(It's not god; it is time that created life!) தொடர்ச்சியான மின்னல்கள் மூலமும் (நம்ம கார்பன் வந்திருக்காக ,மீத்தேன் வந்திருக்காக , அமோனியா கூட வந்திருக்காக வாம்மா மின்னலு!) கடலுள் வெடித்த எரிமலைகள் காரணமாகவும் இந்த சூப்பிற்கு ஆற்றல் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள்.PRIMORDIAL சூப் என்னும் இந்த சூப் தான் நம் ஆதி உயிர் குழம்பு.
அடுத்து தன்னைத் தானே படியெடுத்துக் கொள்ளும் தன்மை உடைய டி.என்.ஏ மூலக்கூறுகள்! (இவையும் கார்பன் சங்கிலிகள் தான்) உலகில் முதன் முதல் டி.என்.ஏ ஏணி உருவாவதற்கு பூமித்தாய் பல மில்லியன் ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆழ்கடலில் மில்லர்-யூரே ஆய்வை செய்து விட்டு மில்லியன் ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தால் ஒரு DNA மூலக்கூறை நாம் தரிசிக்க முடியும் என்கிறார்கள்.(It's not god; it is time that created life!) தொடர்ச்சியான மின்னல்கள் மூலமும் (நம்ம கார்பன் வந்திருக்காக ,மீத்தேன் வந்திருக்காக , அமோனியா கூட வந்திருக்காக வாம்மா மின்னலு!) கடலுள் வெடித்த எரிமலைகள் காரணமாகவும் இந்த சூப்பிற்கு ஆற்றல் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள்.PRIMORDIAL சூப் என்னும் இந்த சூப் தான் நம் ஆதி உயிர் குழம்பு.
![]() |
| சில சிக்கலான கார்பன் சங்கிலிகள் |
எனவே லாஜிகலாக ஓர் உயிர் உருவாக தண்ணீர், கார்பன் மற்றும் தன்னைத் தானே படிஎடுக்கும் DNA மூலக்கூறுகள் தேவை என்று வைத்துக் கொள்ளலாம்.இதை வைத்துக் கொண்டு பிரபஞ்சத்தில் INTELLIGENT LIFE இருக்கிறதா என்று தேட முடியும். அதாவது தண்ணீர் இல்லாத கிரகங்களை தாட்சிண்யம் இன்றி ஒதுக்கி விடலாம்.தண்ணீர் இருந்து கார்பன் இல்லாவிட்டால் அதையும் ஒதுக்கி விடலாம். பிரபஞ்சத்தில்(காலக்ஸியில்) உயிரினங்களைத் தேடுவதற்கு ட்ராக் சமன்பாடு (DRAKE 'S EQUATION ) உதவுகிறது.
இங்கே,
- N = பால்வீதி மண்டலத்தில் இருக்கும் நாகரீகங்களின் எண்ணிக்கை. (நம்மால் தொடர்பு கொள்ள முடிந்த)
Fp = அந்த நட்சத்திரங்களில் கிரகம் உள்ள நட்சத்திரங்கள்
Ne = அந்த கிரகங்களில் வாழ்க்கையை support செய்யக்கூடிய கிரகங்கள்
Fl = அந்த கிரகங்களில் வாழ்க்கை தோன்றக்கூடிய கிரகங்கள்
Fi = அந்த கிரகங்களில் 'அறிவுள்ள' உயிர்கள் தோன்றும் கிரகங்கள்
Fc = அந்த உயிரினங்களில் தங்கள் இருப்பை வெளிப்படுத்தும் திறன் கொண்ட நாகரீகங்களின் எண்ணிக்கை
L = அந்த நாகரீகங்கள் தங்கள் இருப்பை வெளியில் வெளிப்படுத்தும் காலகட்டம்
(R ) புதிதாகப் பிறந்த நட்சத்திரங்கள் மிக சீக்கிரம் சூரியனைப் போன்ற MAIN SEQUENCE ஸ்டார் ஆகின்றன. ஒரு நட்சத்திரம் வெள்ளைக் குள்ளனாக (white dwarf )வோ சிவப்பு ராட்சசனாகவோ (Red giant ) இருந்தால் அதன் கிரகத்தில் உயிர்கள் தோன்ற முடியாது.எனவே உயிர்கள் தோன்றுவதற்கு புதிய நட்சத்திரங்கள் அவசியம்.நம் காலக்ஸியில் ஒரு வருடத்துக்கு சராசரியாக ஏழு விண்மீன் குழந்தைகள் பிறக்கின்றனவாம்.
நட்சத்திரம் ஜம்மென்று இருந்தாலும் அதில் வாழ்க்கையை தாங்கக்கூடிய கிரகங்கள் இருக்க வேண்டும். அதாவது அதன் Habitable zone னுக்குள். கோள் ரொம்பவே உள்ளே இருந்தால் அதன் தண்ணீர் எல்லாம் ஆவியாகி விடும். ரொம்பவும் தள்ளி இருந்தால் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து விடும்.நம் பூமி இருப்பது போல ஒரு Safer distance இல் இருக்க வேண்டும். Gliese 581 c என்ற பூமி நிகர் (earth like ) கிரகத்தைத் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். (பூமியைப் போல ஐந்து மடங்கு கணம்; வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ்)சமீபத்தில் இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதன் விசேஷம் என்ன என்றால் அதில் முழுவதும் கார்பன் தன் படிக நிலையில் இருக்கிறதாம். கார்பனின் படிக நிலை என்றால் அது வைரம். அதாவது நம் பூமியில் எப்படி மண் (சிலிகா)இருக்கிறதோ அது போல அங்கே வைரம். தூரத்தில் இருந்து பார்த்தால் கிரகம் எப்படி ஜொலிக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!
ஆனாலும் சில விஞ்ஞானிகள் ட்ராக் சமன்பாடு முற்றிலும் தவறு என்கின்றனர். ஒரு ஆறேழு காரணிகளை வைத்துக் கொண்டு உயிர்கள் இருப்பதை கணிக்க முடியாதது என்கின்றனர்.Life is a product of infinite number of possibilities. IOW, Drake's equation should have infinite number of variables. ட்ராக் சமன்பாடு நிறைய காரணிகளின் பெருக்கல் பலனாக இருப்பதால் ஒன்று பூச்சியம் ஆனாலும் உயிர்கள் தோன்றக் கூடிய சாத்தியக் கூறு பூஜ்ஜியம் ஆகி விடுகிறது. பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு நிறைய விஷயங்கள் சாதகமாக அமைந்துள்ளன. சூரியனிடம் இருந்து அதன் தூரம், பூமியின் சாய்வு, நிறை, காந்தப்புலம் ,வளிமண்டலம், ஓசோன் படலம், கடல்கள்,துணைக்கோள் நிலா, பூமிக்கு அடுத்து பூதாகரமான வாயுக்கோள் வியாழன் (ஆஸ்டிராய்டுகளை உள்ளே விடாமல் விலக்க) , ஆக்சிஜன், கார்பன், வளிமண்டல அழுத்தம், etc .,(RARE EARTH HYPOTHESIS )[பூமிக்கு நிலவு இல்லை என்றால் கடல்கள் துருவப்பகுதிக்கு ஓடிப் போய் விடும்.பூமியின் சுழற்சி நிலவின் ஈர்ப்பு இல்லாததால் பல மடங்கு அதிகரித்து குறுகிய இரவு பகல் சுழற்சி ஏற்படும்.இது தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவாது!]
அதாவது பூமியில் உயிர்கள் தோன்றியது மிக மிக மிக அரியதொரு நிகழ்வு என்கிறார்கள். மாயாஜாலப் படம் ஒன்றில் ராஜாவின் நோய் தீர்க்கும் மருந்து என்ன என்பதற்கு வைத்தியன் , "நடு அமாவாசை இரவில் மழை பொழியும் போது அந்த மழைநீர் ஒரு மண்டை ஓட்டின் உள்ளே நேரடியாக விழ வேண்டும்.அதில் நல்ல பாம்பின் விஷம் ஒரு சிறிதே கலக்க வேண்டும்.அதுதான் மருந்து" என்பான். அது போல பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு நிறைய நிறைய ஆயிரக்கணக்கான காரணிகள் ஆச்சரியகரமாக ஒன்று சேர வேண்டும்.(improbable combination of astrophysical and geological events and circumstances.) அரிய பூமி அனுமானம் என்ற இந்தக் கொள்கை கோபர்னிகன் தத்துவத்துக்கு எதிரானது.கோபர்னிகன் கொள்கை பூமி இந்த பிரபஞ்சத்தில் எந்த விதத்திலும் ஸ்பெஷல் அல்ல என்கிறது.நாம் பத்தோடு பதினொன்று தான். உயிர்கள் எங்கே வேண்டுமானாலும் தோன்ற முடியும் என்கிறது .ஆனால் FERMI PARADOX என்ற இன்னொரு தத்துவம் அறிவுள்ள) உயிர்கள் வேறு கிரகங்களில் இருந்தால் அவர்களின் சிக்னல்களை நாம் ஏன் அறிய முடிவதில்லை என்று கேட்கிறது. நாம் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த நூறு ஆண்டுகளிலேயே ரேடியோ அலைக் குப்பைகளை ஏராளமாக வெளியில்(space ) வீசி உள்ளோம். நம் காலக்ஸியில் எங்காவது வளர்ச்சியடைந்த நாகரீகங்கள் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக தொலைத்தொடர்புக்கு மின்காந்த அலைகளை உபயோகப்படுத்த வேண்டும். அவற்றின் மிச்சங்களை நாம் ஏன் detect செய்ய முடிவதில்லை?
![]() |
| milky way galaxy |
நம் பால்வீதி காலக்சி கூட ஸ்பெஷல் என்கிறார்கள்.ஏனென்றால் மற்ற காலக்சிகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் சாது. நட்சத்திர மோதல்கள்,சூப்பர் நோவாக்கள் போன்றவை இங்கே அடிக்கடி நிகழ்வதில்லை.மேலும் நம் சூரியன் காலக்ஸியின் மையத்தில் இல்லாமல் ஓரளவு விளிம்பில் உள்ளது.மையத்துக்கு அருகில் இருந்தால் காமா கதிர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும்.மேலும் நம் சூரியன் நடுத்தர வயதில் இருக்கிறது.இதையெல்லாம் பார்க்கும் போது நாம் ஒரு விதத்தில் ஸ்பெஷல் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் நம் பக்கத்து வீட்டுக்காரர்களை தேடும் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் தான் இருக்கிறது.
........
சமுத்ரா
........
சமுத்ரா



















